சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

குழந்தைகள் தின சிறப்பு விழா  -  24 Nov 2017

குழந்தைகள் தின சிறப்பு விழா

குவைத் தமிழ் சங்கம் குழந்தைகள் தின சிறப்பு விழாவை வெள்ளிக்கிழமை , 24 ம் தேதி நவம்பர் மாதம் சிறப்புற நடத்தியது. இவ்விழா ஸ்மார்ட் இந்தியன் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர். G. பாஸ்கரன் , துணை வேந்தர் , தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நமது பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு ஏற்றி , தமிழ் தாய் வாழ்த்து மற்றும் இந்திய & குவைத் தேசிய கீதம் இசைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் விழாவில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர். அரங்கமே விதம் விதமான வேடங்களுடன்  சின்னஞ் சிறார்களும், உலகப் பொதுமறையான திருக்குறளை ஒப்புவித்தலும், மனதை மயக்கும் பாடல்களும், இசையும், சிலிர்க்கவைக்கும் நடனங்களும், அறிவுப்பூர்வமான வினாடி வினாவும் , சிந்திக்க வைக்கும் நாடகங்களும், நகைச்சுவையுடன் கூடிய  DubSmash- ம், முத்தான பேச்சுக்களும் கொண்டு குழந்தைகள் அரங்கத்தை அதிர வைத்தனர். குழந்தைகளுக்கான இந்த நிகழ்வு முற்றிலும் குழந்தைகளாலேயே நடத்தப்பெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் குழந்தைகளே அழகிய தமிழில் தொகுத்து வழங்கினர்.

குவைத் தமிழ் சங்க உறுப்பினர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அரங்கத்தில் நடந்த தொடர் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். குழந்தைகள் வண்ண வண்ண உடைகளுடனும் , விதம் விதமான அலங்காரங்களுடனும் வியக்க வைக்கும் திறமைகளைக் கண்டு இமை மூடாமல் ரசித்தனர் குழுமி இருந்த அனைவரும்

இந்த விழாவின் ஒரு பகுதியாக திரு கோதண்டராமன் முதல்வர் வேலம்மாள் பள்ளி, சென்னை, பங்கு கொண்டு வேலம்மாள் பள்ளியைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர் திரு G.பாஸ்கரன் சிறப்புரையும் திரு. க.  புகழேந்திரன் தலைமை உரையும் , திரு. நா .ராதாகிருஷ்ணன் செயலாளர் வரவேற்புரையும் திரு. ரா ஆனந்தராஜ் நன்றியுரையும் அளித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுக்கு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்படடன. கடந்த ஆண்டு 2016 -17 ல் நடந்த பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

கண்களுக்கு விருந்தளித்த குழந்தைகளுக்கும் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் சங்கீதா உணவகத்தில் இருந்து அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

இறுதியாக சங்க நிகழ்வுகள் செவ்வனே நடைபெற பெரிதும் உதவிய நன்கொடையாளர்களுக்கும், குவைத் தமிழ் சங்க உறுப்பினர்களின் தொடர்ந்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து விழா இனிதே நிறைவடைந்தது.