சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

துவக்கவிழா - பல்சுவை மாலை - 24-05-2013  -  24 May 2013

துவக்கவிழா - பல்சுவை மாலை - 24-05-2013

துவக்கவிழா - பல்சுவை மாலை

 

குவைத்தில் சீரும் சிறப்புடன் செந்தமிழோடு சமூகப்பணி ஆற்றிவரும் குவைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா திருவள்ளுவராண்டு 2044 வைகாசித் திங்கள் 10ஆம் தேதி (24.05.2013)  வெள்ளிக்கிழமை நிறைமதி மாலைப் பொழுதில் குவைத் மெடிக்கல் அசோசியேசன் - சாப்ரியா அரங்கத்தில் நடைபெற்றது. திருமதி. உஷா கிருஷ்ணமூர்த்தி, திருமதி. அகிலா பழனிக்குமார், திருமதி. சரவணதேவி ஆவுடைநாயகம், திருமதி. மகாலட்சுமி ராஜா மற்றும் திருமதி. சங்கீதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

 

மகளிர் செயற்குழு உறுப்பினர் திருமதி.ஹேமலதா ரத்தினவேலு அவர்கள் புதியதாக பொறுப்பு எடுத்துக் கொண்ட நிர்வாகக்குழுவின் தலைவர் திரு.பழனிக்குமார் அவர்களை வரவேற்புரையாற்ற அழைத்தார். தலைவர், ஔவை பாட்டியின் பாடல்களை நினைவுபடுத்தி இயன்றவரை தமிழரோடு தமிழில் பேசுவோம் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

 

நிகழ்ச்சியை மெருகேற்ற அந்தமானிலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவர் திரு.கிருட்டிணமூர்த்தி  அவர்களையும் தமிழ்த்திரை இசைப் பின்னணி பாடகர்கள் திரு.கார்த்திகேயன், திருமதி.பிரியதர்ஷினி  மற்றும் பல்குரல் மன்னன் திரு.படவா கோபி அவர்களையும் வரவேற்று பேசினார்.  தொடர்ந்து திரு.படவா கோபி அவர்களை பல்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்படி கேட்டுக்கொண்டு விடைபெற்றார்.

 

மேடையில் திரு படவா கோபி தன் பல்குரல் திறமையை நகைச்சுவையோடு வெளிபடுத்திய விதம் அரங்கத்தில் குழந்தைகள் முதல் பார்வையாளர்கள் அனைவரையும் குதூகலப்படுத்தியது. திரு படவா கோபி பாடகர்கள் இருவரையும் அவையோருக்கு அறிமுகப்படுத்தினார். இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களோடு தொடங்கி திரு.கார்த்திகேயனும் திருமதி.பிரியதர்ஷினியும் அவையினரின் பெரும் கரகோசத்தை வாகை சூடினர்.

 

குறிப்பாக தமிழ்க்கடவுள் முருகனைப்போற்றி ஔவையார் பாடிய பாடலை திருமதி.பிரியதர்ஷினி பாடியது கே.பி.சுந்தராம்பாள் அவர்களே நேரில் தோன்றி பாடிய  உணர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியது.

 

அடுத்தபடியாக சங்கத் துணைத் தலைவர் திரு.புகழேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினர் திரு. கிருட்டிணமூர்த்தி அவர்களை அறிமுகப்படுத்தி அவர் அந்தமானில் ஆற்றிவரும் தமிழ்ப் பணியை எடுத்துக் கூறினார்.

 

அடுத்து திரு. கிருட்டிணமூர்த்தி  அவர்கள் "எல்லை தாண்டிய தமிழ்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தன்  உரையில் தமிழின் தொன்மையையும், தமிழே உலக மொழிகளுக்கெல்லாம் முன் தோன்றிய மொழி என்றும்  காவியங்கள் வாயிலாக சான்றுரைத்தார். மேலும் தமிழ் மொழியின் தற்போதைய நிலை தாயகத்தில் தோய்ந்து வருவதையும் எல்லைதாண்டி அது வளர்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார். அவரது எளிய, இனிய தமிழ் பேச்சு அனைவரையும் கவர்ந்தது அவையில் காண முடிந்தது.

 

தொடர்ந்து கலைஞர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் குழந்தைச் செல்வங்களின் மனதைக் கவர்ந்ததோடு மெய்மறந்து மேடையேறி ஆடவும் வைத்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பார்வையாளர்களை சோர்வடையாமல் நிகழ்ச்சியின் இறுதிவரை உற்சாகத்துடன் கொண்டு சென்ற பெருமை விகடகவி திரு.படவாகோபி அவர்களையேச் சாரும்.

 

மகளிர் செயற்குழு உறுப்பினர் திருமதி. லலிதா ஸ்ரீதர் அவர்கள் தலைவர் திரு.பழனிக்குமார் அவர்களை புதிய செயற்குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.  நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பு விருந்தினர் மற்றும் கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தியது குவைத் தமிழ்ச் சங்கம்.

 

அனைவருக்கும் நன்றி தெரிவித்து செயலாளர் திரு.இரவிக்குமார் அவர்கள் நன்றியுரை கூற வாழிய செந்தமிழ் பாடலுடன் விழா திட்டமிடப்பட்ட நேரத்தில் இனிதே நிறைவுற்றது.

 

பல்சுவையுடன் அனைவருக்கும் அறுசுவை இரவு உணவும்  பரிமாறப்பட்டது.