சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

குழந்தைகள் திருவிழா - Children's Day  -  15 Nov 2013

குழந்தைகள் திருவிழா - Children\'s Day

குழந்தைகள் திருவிழா : 

 

குவைத் தமிழ்ச் சங்கத்தின் இவ்வருட இரண்டாவது நிகழ்ச்சியாக  “குழந்தைகள் தினவிழா”  நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை  காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை “குழந்தைகள் திருவிழாவாக”  கெய்த்தான் கார்மெல் பள்ளி (Carmel School Auditorium, Khaitan) அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

 

மகளிர் செயற்குழு உறுப்பினர்கள் திருமதி. ஹேமலதா ரத்தினவேல்,  திருமதி. அருள் செல்வி ராஜ்குமார், திருமதி. சிவஜோதிமணி ராமகிருஷ்ணன், திருமதி. திலகம் பாலகபாண்டியன், திருமதி. ஷீலா பாலமுருகன் ஆகியோர்கள் குத்துவிளக்கு ஏற்ற விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது.

 

தொடர்ந்து  தலைவர் திரு.பழனிக்குமார் அவர்கள்  குழந்தைகள் தின வாழ்த்து  தெரிவித்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

 

175 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி குழந்தைகளாலேயே  நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நிகழ்ச்சியாக ஆடை அலங்கார மாறுவேடத்தில் 30 குழந்தைகள் வண்ணவண்ண பூச்சிகளாய் வந்து மேடையை அலங்கரித்தது பார்வையாளர்களின் மனதைப் சிறகடித்து பறக்கச் செய்தது.

 

அடுத்ததாக திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் பேச்சு நிகழ்ச்சியில் மழலை மொழியில்  குறளை அதன் பொருளோடு கூறியவிதமும் கொடுத்த தலைப்பில் குழந்தைகள் பேச்சாற்றிய  அழகும் அனைவரையும் வியக்கவைத்தது.

 

பாட்டு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் இனிய குரலில் பாடி காண்போரை வியப்பில் ஆழ்த்தினார்கள்.

 

அதேபோல் நடன நிகழ்ச்சியும்  மிகமிகச் சிறப்பாக அரங்கேறி அனைவருடைய பாராட்டையும் பெற்றது. இதில் 17 குழுக்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் படியாக பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்துச்சென்றது. இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்கள் கொடுத்த உக்கமும் அளித்த சிறந்த பயிற்சியுமே.

 

மேல்நிலை மாணவர்களுக்காக நடைபெற்ற விநாடி வினா நிகழ்ச்சியில்  அறிவு சுற்று, ஒளிச்சுற்று,  ஒலிச் சுற்று,  விரைவு சுற்று   என நான்கு சுற்றுக்களாக இயல், இசை, நாடகம் என்ற மூன்று குழுக்களிடம்  கேள்விகள் தொடுக்கப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு சரியாக விடையளித்து, மாணவர்கள் பார்வையாளர்களின் பெரும் கரகோசத்தைப் பரிசாகப் பெற்றனர்.

 

குழந்தைச்செல்வங்கள் தங்கள் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள், அறிவியல் சோதனைகள், கைவினை பொருட்கள் ஆகியவற்றை கண்காட்சியில் இடம்பெறசெய்திருந்தினர்.

 

இவ்வாறு குவைத் தமிழ்ச்சங்கம் மாணவர்களின் பல்வேறு வகையான திறமைகளை ஊக்குவித்து ஒவ்வொர் ஆண்டும் அவர்களுக்கு மேடையமைத்து கொடுப்பதோடு மட்டுமில்லாமல் அதற்கும் மேலாக அவர்களின்  கல்வித்திறனை மேம்படுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நற்சான்றிதலும் பரிசும் வழங்கி கௌரவ படுத்துகின்றது.

 

அதேபோல் இவ்வருடம்,  நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சால்மியா அம்மான் கிளை இந்தியன் கம்னியுட்டி பள்ளியின் துணைமுதல்வர் திருமதி.காயத்ரி இரவீந்திரன் அவர்கள் கடந்த 2011-12, 2012-13  கல்வியாண்டுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சான்றிதலும் வெற்றிக்கோப்பையும் வழங்கி பாராட்டிப்  பேசினார். மேலும் அவர்கள் ஆற்றிய உரை மாணவர்களுக்கு ஒர் உந்துதலையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.  சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவப்படுத்தியது குவைத் தமிழ்ச் சங்கம்.

 

இறுதி நிகழ்ச்சியாக விழாவில் பங்குகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதல்களும் கோப்பைகளும் நன்கொடையாளர்கள்,  நலவிரும்பிகள் மற்றும் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு மு.பழனிக் குமார் -தலைவர், திரு புகழேந்திரன்- துணைத் தலைவர்,  திரு மு. ரவிக்குமார்-பொதுச் செயலாளர், திரு ஜெயப்பிரகாஷ் -துணைச் செயலாளர், திரு முருகேசன்- துணைப் பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள்  திரு ராதாகிருஷ்ணன், திரு  திருமாறன், திரு ஜெயமணி, திரு ஜனார்தனன், திருமதி. ஹேமலதா ரத்தினவேல்,  திருமதி. அருள் செல்வி ராஜ்குமார், திருமதி. சிவஜோதிமணி ராமகிருஷ்ணன், திருமதி. திலகம் பாலகபாண்டியன், திருமதி. ஷீலா பாலமுருகன் அவர்கள் வாயிலாக பரிசாக வழங்கப்பட்டது.

 

பொதுச்செயலாளர் திரு.இரவிக்குமார் அவர்கள் நன்றியுரை கூற வாழிய செந்தமிழ் பாடலுடன் விழா திட்டமிடப்பட்ட நேரத்தில் இனிதே நிறைவுற்றது.

 

விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இன்சுவையோடு  நிறைவான மதிய உணவு பரிமாறப்பட்டது.