சமீபத்திய நிகழ்வுகள் (2012 - 2013)

குவைத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா  -  7 Feb 2014

குவைத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா

குவைத் தமிழ்ச் சங்கத்தின் “பொங்கல் விழா” :

 

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான, உழவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக உதவும் கால்நடைச்செல்வங்களுக்கும் நன்றி தெரிவித்து எடுக்கும் "பொங்கல் விழா" குவைத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த வாரம் பிப்ரவரி மாதம் 07ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை மைதான் ஹவெல்லி அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளி அரங்கத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

 

மகளிர் உறுப்பினர்கள் திருமதி. செல்வி திருமாறன், திருமதி சங்கீதா ராதாகிருஷ்ணன், திருமதி சுதா ஜெயமணி,. திருமதி ரமாதேவி ரவிக்குமார், திருமதி திலகம் பாலகபாண்டியன் ஆகியோர்கள் குத்துவிளக்கு ஏற்ற விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது.

 

தலைவர் திரு.பழனிக்குமார் அவர்கள்  பொங்கல் வாழ்த்து தெரிவித்து நிகழ்ச்சியின் நன்கொடையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் விழாக்கலைஞர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக குவைத் நூரி கம்பெனியின் நிர்வாக இயக்குனர் திரு. ஜாசெம் அல் நூரி அவர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

 

ஆயிரத்து இருநூறுக்கும் மேல் பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்த பொங்கல் விழா " மாபெரும் பொங்கல் இசை விருந்தாக " அரங்கேறியது. தமிழக திரையுலகில் தற்போது வளர்ந்துவரும் திரைப்பட இசை இயக்குனர் திரு நிவாஸ் பிரசன்னா குழுவினரின் இன்னிசையில் திரைப்பட பின்னணி பாடகர்கள் திரு எம்.கே.பாலாஜி, திருமதி சைந்தவி ஜி.வி.பிரகாஷ், திரு சத்யப்ரகாஷ், செல்வி பூஜா மற்றும் செல்வி வந்தனா அவர்கள் தங்களின் இனிமையான குரலால் செவிகளில் தேன் மழை பொழிந்தனர்.

 

இசைக்குழுவில்  திரு நிவாஸ் பிரசன்னா, திரு கார்த்திக் ஐயர், திரு அருண்குமார், திரு ஜோஸ்வா, திரு நவீன் மற்றும் திரு கிஷோர் ஆகியோர் பங்குபெற்றனர். இவர்களின் நேரடி இசைக்கச்சேரி மெல்லிசையாகவும் வல்லிசையகவும் அமைந்து அரங்கத்தையே துள்ளாட்டம் போட  வைத்தது. நான்கு மணி நேரம் நிகழ்ந்த இவ்விழாவை திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு பாலாஜி அவர்கள் நகைச்சுவையோடு தொகுத்து வழங்கினார்.

 

விழாவின் முக்கிய நிகழ்வாக குவைத் தமிழ்ச் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான "பொங்கல் மலர்" வெளியிடப்பட்டது. முதல் மலரினை தலைவர் திரு பழனிக்குமார் வெளியிட சிறப்பு விருந்தினர் திரு ஜாசெம் அல் நூரி அவர்கள் பெற்றுகொண்டார்.

 

தொடர்ந்து சிறப்பு விருந்தினருக்கும் மற்றும் இவ்விழா வெற்றியடைய உதவிய அனைத்து நன்கொடையாளர்களுக்கும் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு மு.பழனிக் குமார் -தலைவர், திரு புகழேந்திரன்- துணைத் தலைவர், திரு மு. ரவிக்குமார்-பொதுச் செயலாளர், திரு ஜெயப்பிரகாஷ் -துணைச் செயலாளர், திரு ஆவுடை நாயகம் பொருளாளர், திரு முருகேசன்- துணைப் பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் திரு திருமாறன், திரு ஜெயமணி, திரு ராதாகிருஷ்ணன், திரு ஜனார்தனன், திருமதி. லலிதா ஸ்ரீதர்  திருமதி. ஹேமலதா ரத்தினவேல், திருமதி. அருள் செல்வி ராஜ்குமார், திருமதி. சிவஜோதிமணி ராமகிருஷ்ணன், திருமதி. திலகம் பாலகபாண்டியன், திருமதி. ஷீலா பாலமுருகன் அவர்கள் வாயிலாக நினைவுக் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இசைவிருந்தளித்த திரை இசைக்கலைஞர்களுக்கும் நினைவு கேடயம் வழங்கி கௌரவப்படுத்தியது குவைத் தமிழ்ச் சங்கம்.

 

பொதுச்செயலாளர் திரு.இரவிக்குமார் அவர்கள் நன்றியுரை கூற வாழிய செந்தமிழ் பாடலுடன் விழா திட்டமிடப்பட்ட நேரத்தில் இனிதே நிறைவுற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இசை விருந்தோடு அறுசுவை இரவு உணவும் வழங்கப்பட்டது.