ஏக்கங்கள்!
- கந்தநாதன் -
வளைகுடா வந்த பிறகு வாழ்வில் தான் எத்தனை ஏக்கங்கள்!
வளைய வளைய வரும் பிள்ளையின் நினைவில் தான்
வளைத்துப் போட்டு மனம் இழந்த ஒவ்வொரு நாள் தூக்கங்கள்!
நெளிய வளர்ந்து நிற்கும் நீண்ட பல கட்டடங்கள்!
வலியினை மறந்து வாழும் வாழ்க்கையினை மறந்து
எளியோர் எம் கை வண்ணத்தில் உருவான உயரக் கொட்டடிகள்!
பறந்து செல்லும் பாதையெங்கும் நட்பாய் ஒட்டகங்கள்!
பறந்து போன வாழ்க்கையினை நினைத்துப் பாலையிலே
பிறந்து கொண்டிருக்கிறோம் பலர் திறக்கப் பெட்டகங்கள்!
வெள்ளிக்கிழமையில் மலர்ந்த எங்கள் பெரிய முகங்கள்!
வெள்ளியும் தங்கமும் கொஞ்சிக் குலாவும் வீதிகளில் எல்லாம்
வெள்ளையுள்ளத்தோடு உறவுகளோடு பரிமாறும் சோகங்கள் சுகங்கள்!
ஏசிக்களில் வாழ்பவர்களின் வசதிநிலை பற்றிக் கவலைப்படாமல்
நேசிப்பவர்களை மட்டுமே நெஞ்சில் ஏற்றபடி என்றும்
பூசிப்பவர்கள் நாங்கள் அரிதாரம் பூசாத பூசனைப்பூக்கள்!
நெற்றியிலே வடிகின்ற முத்துக்கள் எங்கள் சாயப்பூக்கள்!
வெற்றியிலே பங்கெடுத்தாலும் வாழ்க்கை பற்றியே
சற்றும் கவலைப்படாமல் வாழ்கின்ற வியர்வை வாசனைப்பூக்கள்!
பாலை மண்ணும் பயிராகிறது; பட்ட மரமும் துளிராகிறது;
வேலைப்பளுவில் எங்கள் வாழ்வோ பட்ட மரமாகிறது;
சாலையில் சந்தித்துக் கொண்டு சமாதானப் புறாவாகிறது.
வீட்டு நினைவுகள் வந்து வந்து வேதனை தருகிறது;
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த நாட்கள் ஏக்கம் தருகிறது;
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற உண்மை புரிகிறது!
வட்டிக்குக் கடன் வாங்கி வளைகுடா வந்து விட்டோம்!
கட்டி முடித்திடத் தான் கனவு! கட்டிய கட்டடங்கள் சொல்லும்!
வாழ்க்கையையே அடகு வைத்துவிட்டோமென்று இப்போது தான் புரிகிறது!
பட்டப்படிப்பு படித்திருந்தால் இத்தனைகோடி ஏக்கங்கள்
தொட்டிருக்குமா என்பது எத்தனையோ பேர் எழுப்பும் கேள்விக்குறி!
வட்டத்தில் விழுந்த பிறகு இன்றோ வெளி வர இயலாத கேலிக்குறி!
சின்னச் சின்ன ஆசைகள் பெரிது பெரிதாய் ஏக்கங்கள்
கண்ணுக்குள்ளே தேங்கி நிற்கும் கலங்கரை விளக்காய் வீட்டு நினைவுகள்!
எண்ணிக் கொள்ளும் நாட்கள் நனவாக்காதா கனவுகள்!
மணவாழ்க்கை என்பதெல்லாம் முடிந்துபோன கண வாழ்க்கை!
தினந்தோறும் தூக்கம் விற்ற காசுகளை வைத்து எண்ணும் நாங்கள்
சுகந்தேடும் வானம்பாடிகள்! வாழ்க்கை தேடும் நாடோடிகள்!