குவைத் தமிழ்ச் சங்கம் பற்றி
குவைத் தமிழ்ச் சங்கம் பற்றி
குவைத் தமிழ்ச் சங்கம் பற்றி

"தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!" என்ற பாரதியாரின் வரிகளுக்கு இணங்க  திரைகடல் கடந்து வாழ்வையும் பல வளங்களையும் தேடி வந்து வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பணி செய்து கொண்டிருக்கும் நமது தமிழ் மக்களுக்காக தமிழ் ஆர்வலர்களால் 02.10.2005 அன்று இனிதே சிறப்புடன் தொடங்கப்பட்டது.

 

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோண்றிய மூத்த குடி தமிழ் குடி" என்பதனை உறுதிசெய்யும் நம் மொழி, கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை நினைவில் கொண்டு அதன் சிறப்பையும் முக்கியதுவத்தையும் நம் சமுதாயத்துக்கும் சந்ததியர்களுக்கும் எடுத்து சொல்வதே  குவைத் தமிழ்ச் சங்கத்தின் முதன்மையான கடமையாகும்.

 

குவைத் தமிழ்ச் சங்கம் பல மையில் கற்களை கடந்து தற்போது ஏறத்தாழ இருநூறு உறுபினர்களை கொண்டு ஒரு கூட்டுகுடும்பமாக திகழ்கிறது.

 

குவைத் தமிழ் சங்கம் 01-12-2005 அன்று அதிகாரப்பூர்வமாக குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்.KUW/ISI/321/16/2005) அங்கீகாரம் பெற்றுள்ளது.

 

தமிழ்மொழிப் பணி...
தமிழ்மொழிப் பணி...

 

தாயகத்திலிருந்து தமிழ் அறிஞர்களையும், தலை சிறந்த பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும் வரவழைத்து மொழியறிவினையும் அதன் சிறப்பையும் தொடர்ந்து எடுத்துரைத்து வழி நடத்தி வருகின்றது.

 

தமிழரின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை நூலகம் அமைத்தும், தமிழ் வகுப்புக்கள் எடுத்தும் மற்றும் மின்னஞ்சல்  வாயிலாகவும் நமது உறுப்பினர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் நினைவுபடுத்தி கொண்டுள்ளது.

 

 

சமூகப் பணி ...
சமூகப் பணி ...

 

குவைத்திலும் தாயகத்திலும் சூழ்நிலையின் காரணமாக வறுமையில் உதவியை எதிர் நோக்கியுள்ள எளியவர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் இயன்ற கொடையை உறுப்பினர் வாயிலாக அளித்தவண்ணம் உள்ளது.

 

மேலும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு வருடந்தோறும் பண உதவி செய்து வருகின்றது.

 

கலை/கலாச்சார நிகழ்ச்சிகள்
கலை/கலாச்சார நிகழ்ச்சிகள்

 

நாம் தமிழ்நாட்டில் இல்லாத குறையைப் போக்கிக்கொள்ள நமது பாரம்பரிய விழாக்களான பொங்கல், புத்தாண்டு, நவராத்திரி மற்றும் தீபஒளி திருநாட்களில் கலைநிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்து சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்களின் பங்களிப்போடு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள உதவியாக உள்ளது.

 

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை  கலைஞர்களான ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் பாண்டிராஜ், டி.வி.வரதராஜன், மௌலி, ஜேம்ஸ்வசந்தன், சச்சு, ஆன்ட்ரியா, சிவகார்த்திகேயன், ஈரோடு மகேஷ் போன்றவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

 

தமிழரின் கலாச்சாராத்தை நினைவு படுத்தும் சின்னங்களை புகைப்படமாகவும் பொருட்களாகும் கொண்டு நம் முன்னோர்களின் திறமைகளையும் அவர்கள்தம் வாழ்க்கை முறையும் அறிந்துகொள்ள கண்காட்சிகள் அமைக்க முயற்சி செய்துகொண்டுள்ளது.

 

மகளிர் / குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ...
மகளிர் / குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ...

 

நமது உறுப்பினர்களுடைய  இல்லத்தரசிகளின் செயலையும் திறமையும் போற்றி அவர்களுக்கு சிறப்பளிக்கும் வகையில் "மகளிர் தின" நிகழ்ச்சிகளை அமைத்து அவர்களது திறமைகளை ஊக்குவித்து உலகுக்கு எடுத்துசொல்கிறது.

 

மருத்துவ நிபுணர்களின் அறிவுரையும் ஆலோசனையும் சங்கத்தின் வாயிலாக மகளிர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. மகளிர் நல மருத்துவர் திருமதி கமலா செல்வராஜ் மற்றும் கவிஞர்  விசாலி கண்ணதாசன் கலந்துகொண்டு அறிவுரையும் ஆலோசனையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

குழந்தைச் செல்வங்களை  ஊக்கபடுத்த "குழந்தைகள் தின விழா”வில் சிறந்த முறையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிவருகின்றது. மாணவர்களுக்கு சிறந்த அறிவுரைகளையும் பயிற்சியும் அளித்து தேர்வுகளையும் வாழ்வின் தடைகளையும் எதிர் கொள்ள உறுதுணை செய்கிறது.

 

பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ...
பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ...

 

பட்டிமன்றங்கள், நாடகங்கள், விவாத அரங்கங்கள், விநாடி வினா, நகைச்சுவை போன்ற அறிவுசார்ந்த சிந்தனையை தூண்டும் நிகழ்ச்சிகளை அரங்கேற்றி மக்களின் மனதிற்கு விருந்தளிக்கின்றது.

 

கடந்த வருடங்களில் திரு.சுகிசிவம்,  திரு கு.ஞானசம்பந்தம், திரு பெரியார்தாசன், திண்டுக்கல் லியோனி,  திருச்சி கல்யாணராமன், திருமதி பாரதி பாஸ்கர், திருமதி சச்சு போன்ற தமிழ் சொற்பொழிவாளர்கள் வருகை தந்து நமது சங்க நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

 

பலகுரல் மன்னர்கள்  மதுரை முத்து, படவா கோபி, ரோபோ சங்கர், விக்னேஷ் போன்றோர்களும் திரை இசை பின்னணி பாடர்களான அனுராதா ஸ்ரீராம், ஹரிஸ் ராகவேந்திரா, சுசித்ரா, மகதி, பிரியதர்ஷினி, பிரியா ஹிமேஷ், நவீன், எம் எல் ஆர் கார்த்திகேயன், ஆலப் ராஜ், பெல்லி ராஜ்  போன்றோர்களும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தங்கள் குரல் வளத்தால் செவிகளில் தேன் வார்த்தனர்.

 

இன்ப சுற்றுலா ..
இன்ப சுற்றுலா ..

 

வருடம் முழுவதும் ஓய்வின்றி உழைத்துகொண்டுள்ள சங்க உறுப்பினர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கும் ஒரு மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்க விடுமுறை நாட்களில் பூங்காக்களுக்கும் பொழுதுபோக்கு இடங்களுக்கும் இன்ப சுற்றுலா அழைத்துச் செல்கிறது குவைத் தமிழ்ச் சங்கம்.