குப்பை கொட்ட வந்தோமையா
- ஜான்சன் -
தாய் தந்தை நலம் காண தாரமவள் சுகம் காண
தம்பிக்கொரு வழி காண தங்கைக்கொரு பதி காண
பிள்ளைகளோ மதி காண வீட்டினிலே ஒளி காண
கொள்ளைபோன விதி காண மரித்துப்போன கிலி காண
அன்னை நாட்டை விட்டு அண்டை வீட்டை விட்டு
சொந்தம் ஆறை விட்டு பந்தம் நூறை விட்டு
சுவாசக் காற்றை விட்டு பாசக் கூற்றை விட்டு
புட்டி வெட்டி விட்டு பாட்டி வேட்டி விட்டு
குப்பை கொட்ட வந்தோமையா
குவைத்துக்கு வந்தோம் அய்யா
குத்த வச்ச தங்கை வாழ்க்கை
குட்டி போடும் மீட்டர் வட்டி
குறி சொல்லி மாற்றிடவே
குல விளக்கு ஏற்றிடவே
குப்பை கொட்ட வந்தோமையா
குவைத்துக்கு வந்தோம் அய்யா
வந்திறங்கிய நாள் மொதலா
வாழ்க்கை நிறம் மாறிப்போச்சி
வத்த குழம்பு சுடு சோறு
வாசம் கூட மறந்து போச்சி
ஏஜெண்டு சொன்ன பேச்சு
எங்கோயோ ஓடிப் போச்சு
திறந்த வெளி சிறை வாழ்க்கை
இப்போ இங்கே பழகி போச்சு
செம்மொழி
- தேவிரவி, புதுகை -
எங்கள்
காரை நகரில் கம்பனின் தமிழ்
ஊரே போற்றும் உன்னத தமிழ்
பாரையும் ஆண்ட பரம்பரைத் தமிழ்
தேரையும் "பாரி"தர உந்திய தமிழ் ...!
ஒளவை பாட்டியின் அமுதமொழி தமிழ்
அதியமான் கண்ட ஆட்சிமொழி தமிழ்
பாண்டிய மன்னன் வேண்டிய தமிழ்
பாவேந்தர் பாடியதும் இப்பாகு தமிழ் ….!
சோழ வம்சத்தின் சொத்தும் தமிழ்
சோழனின் மனுநீதிக்கு வித்தும் தமிழ்
வள்ளுவன் வளர்த்த வளமைமொழி தமிழ்
வல்லளார் அன்போடு வணங்கியதும் தமிழ் …!
இதிகாச காலத்தில் இருந்ததும் தமிழ்
அதிசயமாய் நயாகரா அருவியிலும் தமிழ்
விடியலுக்காய் போராடி வீழாத தமிழ்
வீருகொண்டு புலியாய் பாய்வதும் தமிழ் …!
எந்தையும் யாய்யும் பேசும்மொழி தமிழ்
சிந்தையில் சுழலும் சுந்தரத் தமிழ்
சிந்துகவி புனையும் இச்சங்கத் தமிழ்
பிந்தைய நாளிலும் இறவா தமிழ் …!